மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது ஆளுங்கட்சியான கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புகுந்து கொடூரமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ மனையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண்ணை மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் பரிந்துரைத்தால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள், உள்ளூர் கவுன்சிலரை மருத்துவமனைக்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு வந்த கவுன்சிலர் மற்றும் அவரது ஆட்கள், சூழ்நிலையைச் சற்றும் புரிந்து கொள்ளாமல் பெண் டாக்டர் மற்றும் செவிலியர்களைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி, பயங்கரமான முறையில் தாக்கியதுடன், “உங்களை சும்மா விட மாட்டோம், பெண் ஆதரவாளர்களைக் கூட்டிட்டு வந்து உங்களை உதைப்போம்” என்றும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்தக் கொடூரத் தாக்குதல் குறித்துப் பேசிய பெண் டாக்டரின் பெற்றோர், “என் மகள் சேவை செய்வதையே உயர்ந்த நோக்கமாகக் கொண்டு உழைத்தவள், அவள் தரப்பில் எந்தத் தவறும் இல்லை; ஆனால், அவளை மிருகத்தனமாக அடித்ததைப் பார்த்தபோது தாயாக என் நெஞ்சே வெடித்துச் சிதறிவிட்டது” அவள் இப்பொழுது வேலைக்கு வரவே பயப்படுகிறாள் என்று கண்ணீருடன் நீதி கேட்ட நிலையில், மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த கவுன்சிலர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், ஆளுங்கட்சியின் உயர் தலைவர்கள் யாரும் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு ஆதரவாக எந்த ஒரு உத்தரவாதமும் அளிக்கவில்லை என்று மருத்துவர்கள் சங்கம் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருவதோடு, பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
