எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாடு குறித்துப் பரவிவரும் விமர்சனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். E20 பெட்ரோலைப் பயன்படுத்தியதால் வாகனங்களில் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறுபவர்கள், எந்த காரில் பிரச்சனை ஏற்பட்டது என்ற பெயரையாவது கூறட்டும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் போன்ற இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களை இந்தியா சார்ந்திருப்பது பொருளாதாரச் சுமையாகவும், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதால், தூய்மையான எரிசக்தியான எத்தனால் பயன்பாட்டை ஊக்குவிப்பது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

தனது குடும்ப நிறுவனங்கள் எத்தனால் உற்பத்தியைச் சார்ந்து இருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த எத்தனால் கலப்புத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன், விவசாயிகளுக்கும் பெரும் பயனை அளித்து வருகிறது.

மக்காச்சோளம் போன்ற பயிர்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்வதால், விவசாயிகளுக்குக் கூடுதல் விலை கிடைத்து வருமானம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநில விவசாயிகள் மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், வாகனங்களில் E85, E100 போன்ற உயிரி எரிபொருட்கள் மற்றும் ஹைட்ரஜன்-சிஎன்ஜி கலவைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கார்பன் வெளியேற்றத்தைக் குறைத்து, கச்சா எண்ணெய் மீதான தேவையைக் குறைப்பதே இந்த அரசின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.