ஒடிசா மாநிலத்தின் பாலசோர் நகரில் அமைந்துள்ள கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே கல்லூரி பேராசிரியர் மீது புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியதாவது, கல்லூரி பேராசிரியர் சமீர் குமார் சாஹூ என்பவர் தனக்கு சில நாட்களாக பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வருவதாகவும் இதை பற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மாணவி கடந்த ஜூலை 1-ம் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். அதற்கு கல்லூரி நிர்வாகம் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து கடந்த 12-ம் தேதி மாணவர்களுடன் சேர்ந்து மாணவி போராட்டம் நடத்தினார்.

அப்போது மாணவி திடீரென கல்லூரி நிர்வாகத்தின் முன்பு நின்று தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கடந்த 3 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்றிரவு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது,‌ மாணவி பேராசிரியர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்குமாறு கல்லூரி நிர்வாகம் மாணவியை வற்புறுத்தியதாகவும், வாபஸ் வாங்கவில்லை என்றால் கொன்று விடுவோம் என மிரட்டியதாகவும் மாணவியின் பெற்றோர் கூறினர்.

மேலும் உன் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்து கைது செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். எனவே மாணவி தற்கொலைக்கு கல்லூரி நிர்வாகமும் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் மாணவி தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவத்தால்  மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.