உத்திரபிரதேசம் மீரட்டில், சர்தானா காவல் நிலையத்திற்குட்பட்ட நவாப்கர்ஹி கிராமத்தில்  நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆசாத் என்ற நபர், 11 வயது ரெஹான் மற்றும் 14 வயது உவைஷ் என்ற சிறுவர்களை மாந்திரீக சடங்குகளுக்காக கழுத்தை நெரித்து கொன்று, பாழடைந்த வீட்டில் மற்றும் வயலில் உடலை வீசினார்.

ஏற்கனவே ஏப்ரல் மாதம் ரெஹான் காணாமல் போனபோது, அவரது தாய் ஃபர்ஹானா, ஆசாத்தை சந்தேகித்து நேரடியாக போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். ஆனால் போலீசார், “இது காதல் தொடர்பான விஷயமா இருக்கலாம்” என கூறி வழக்கை ஏற்க மறுத்தனர்.

இப்போது உவைஷின் கொலைக்கு பின்னர், பாழடைந்த வீட்டை சோதனையிட்ட போலீசார், ரெஹானின் உடற்கூறுகள் மற்றும் தலைமுடியைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும், உவைஷின் தந்தைக்கு ரூ.5 லட்சம் பணம் கேட்டு QR code கொண்ட மிரட்டல் செய்தியும் வந்துள்ளது.

ஆசாத்தின் வீட்டை நோக்கி நூற்றுக்கணக்கான கிராம மக்கள் அணிவகுத்து சென்று, அங்கு இருந்த அவரது தாயும் சகோதரியையும் தாக்க முயன்றனர். போலீசார் வரவே கூட்டத்துடன் மோதல் ஏற்பட்டது. கடுமையான கட்டுப்பாட்டின் பிறகு, போலீசார் அவர்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றனர்.

ஆசாத் மீது கொலை, கடத்தல் மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது. மேலும், அவரது தந்தை இக்ராமுதீன் மற்றும் சகோதரர் ஜுபைர் மீதும் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட கிராமப்புற எஸ்பி ராகேஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ரெஹானின் உடல்களை மீட்கும் நடவடிக்கையும் தொடர்கிறது.