மும்பை அருகே ஒட்டிய நைகான் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட சோகமான விபத்தில், 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயதான ஆகாஷ் சந்தோஷ் சாஹு என்ற மாணவர், வெள்ளிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில், அவர் அடித்த ஷட்டில் ஜன்னலில் சிக்கியதை தொடர்ந்து, அதனை எடுக்க அவர் முதல்மாடியில் உள்ள ஜன்னலில் ஏறிய போது, அங்கிருந்த ஏசி வயரில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிக்கிக் கொண்டார்.

மின்சாரம் தாக்கியதால் மாணவர் மயங்கி விழ, அவரை காப்பாற்ற நண்பர்கள் தண்ணீர் கொண்டு ஓடினர்.  தண்ணீர் ஊற்றியும், சுயநினைவு திரும்பாததால், அவரை தூக்கிச் செல்வதையும் சிசிடிவி வீடியோவில் காணலாம். ஆனால்  மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாகவே ஆகாஷ் உயிரிழந்துவிட்டார். இந்த துயர சம்பவம் அந்த குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் உயிரிழப்புக்கு காரணமான அந்த ஏசி கனெக்ஷனில்  மின் கசிவு இருந்ததா? பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டதா? என்பதை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

 

சம்பவம் குறித்த முழு காட்சி சொசைட்டியின் சிசிடிவி காமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கி விட்டனர். ஏசி வயரிங் முறையில் யாருடைய தவறு காரணமாக மின்சாரம் வெளியேறி இருந்தது என்பது குறித்து மின்வாரியத்தினரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு ரீதியாக தவறான அமைப்புகளால் மாணவனின் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிறுவர்களுடன் விளையாடும் இடங்களில் இத்தகைய உயிருக்கு ஆபத்தான மின்சாதனங்களை சரிவர பராமரிக்காதது குறித்து சமூகத்தில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.