மதுரை மாவட்டம், கல்மீடு அஞ்சுகம் நகர் பகுதியில் 18 வயதான அரசு என்ற இளைஞர், அரசு பள்ளியில் படிப்பை முடித்தபின் பெயிண்டர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். சம்பவத்தன்று நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரை, அதே பகுதியைச் சேர்ந்த செல்லபாண்டி என்ற நபர் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் பலமுறை குத்தி கொலை செய்திருக்கிறார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, இந்த கொலையின் பின்னணியில் ஒரு சின்ன பிராங்க் கால் தான் இருப்பது தெரியவந்தது. அரசும்,  செல்லபாண்டியின் தம்பி அழகு பாண்டியும் பள்ளிக் கால நண்பர்கள்.

அண்ணன், தம்பி இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன், ஒரு எண்ணிலிருந்து அரசின் தாயாருக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில், போலீசாரை போல் நடித்து, “உங்கள் பையனை ஒழுங்கா வைத்துக்கங்க” என மிரட்டியதால், அரசின் தாய் பயந்து போனார். பின்னர் அரசு விசாரித்தபோது, அந்தக் கால் அழகுபாண்டி ஏற்பாடு செய்த பிராங்க் கால் என்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து, இருவருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஆகியவை ஏற்பட்டன. குடும்பத்தினரால் சமாதானம் செய்யப்பட்டபோதும், அரசும் அழகுபாண்டியும் தொடர்ந்து பேசாமல், உறவுகள் முற்றிலும் முறிந்தன.

இந்த நிலையில், சம்பவத்திற்கு முந்தைய நாள், அரசு, அழகுபாண்டியின் அண்ணன் செல்லபாண்டியை கடுமையாக முறைத்ததாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த செல்லபாண்டி, அரசை “தீர்த்துக் கட்ட” முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தற்போது தலைமறைவாக உள்ள செல்லபாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர்.