கர்நாடக மாநிலம் சிவமோகா நகரில், கடன் திருப்பிச் செலுத்தும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின்போது, 30 வயதான வித்யா என்ற பெண்ணை அவரது கணவர் விஜய் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவ்வனகிரே மாவட்டம் சன்னகிரி தாலுகாவை சேர்ந்த இந்த தம்பதிகள், ஜூலை 8ஆம் தேதி மதிய வேளையில் கடன் விவகாரம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் வாக்குவாதம் முற்றி, வித்யா தரையில் விழுந்த நிலையில், விஜய் அவரது மூக்கின் முன்பகுதியை கடித்து சேதப்படுத்தினார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு, முதலில் சிவமோகா மெகன் அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.
இதுதொடர்பாக மருத்துவ-சட்ட வழக்கு (MLC) ஷிவமோகா ஜெயநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, புகார் அளித்த வித்யாவின் சொந்த இடமான தவ்வனகிரே மாவட்ட சன்னகிரி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்ட விஜய் இப்போது தலைமறைவாக உள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதே போல், மே மாதத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கார் பார்கிங் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின் போது, க்ஷிதிஜ் மிஸ்ரா என்ற நபர், ரேடன் பிளானெட் குடியிருப்பு சங்கச் செயலாளர் ஆர்.எஸ்.யாதவின் மூக்கை கடித்து அறுத்த சம்பவமும் நடந்தது. ராத்திரி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. யாதவ், தமது மகளுடன், கார் பார்க்கிங் பிரச்சனையை தீர்க்க முயற்சித்த போது, மிஸ்ரா தாக்கியதாகக் கூறப்படுகிறது. யாதவ், கான்பூர் ரீஜென்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மூக்கு இணைப்பது சாத்தியமில்லை என கூறி டெல்லிக்கு மாற்றப்பட்டார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடப்பது சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
