தர்மபுரி மாவட்டம் ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இளையராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில் தனது தந்தைக்கு சொந்தமான 51/2 ஏக்கர் நிலத்தை தனது சகோதரிகளுக்கு பிரித்துக் கொடுக்க எண்ணினார். அதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பெயரிலும், 2 சகோதரிகளின் பெயர்களிலும் பத்திரப்பதிவு செய்தார்

. அதன் பின் தனக்கான நிலத்திற்கு தனி பட்டா வேண்டும் என்று இளையராஜா இணையதளம் மூலமாக விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து விண்ணப்பித்த நகலுடன் மணியம்பாடி கிராம நில அளவையர் விஜயகுமாரை சந்தித்தார். அப்போது தனிப்பட்டா வேண்டுமென்றால் ரூ. 10000 லஞ்சம் வேண்டும் என்று விஜயகுமார் கூறியதால் இளையராஜா லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை இளையராஜாவிடம் கொடுத்து நில அளவையரான விஜய குமாரிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர். அதன்படி இளையராஜா பணத்தை எடுத்துக்கொண்டு பெட்ரோல் பங்க் அருகே நின்று கொண்டிருந்த நில அளவையர் விஜயகுமாரிடம் கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விஜயகுமாரை கையும் களவுமாக பிடித்தனர்.

அவரை கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.