தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் மருதக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஜஸ்வந்த் (8), மாதவன் (10), பாலமுருகன் (10) என்ற மூன்று சிறுவர்கள், நேற்று , ஜூலை 11 ஆம் தேதி மாலை 4.30 மணியளவில் பள்ளிக்குச் சென்ற பிறகு, அந்த கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்தனர். இந்த செய்தி அந்தப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பெரும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலையும், தனது ஆறுதலையும் தெரிவித்திருக்கிறார். இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனையடைந்ததாகவும், உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தனது இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த துயரத்தில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கும் ஆறுதலாக, தலா ரூ.3 லட்சம் வீதம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அரசு நிர்வாகம் சார்பில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
