திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை கூறிய நிலையில், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அல்கிஸ் அமல்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியான அமல்ராஜிற்கு 1 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் செலுத்த உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சாட்சிகளை முறையாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, குற்றவாளிக்கு தக்க தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்த காவல்துறை அதிகாரிகளின் பணியை திருநெல்வேலி மாவட்ட எஸ்பி சிலம்பரசன், பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடிய அரசு வழக்கறிஞர் உஷா என்பவருக்கும் அவர் பாராட்டுக்கள் தெரிவித்தார்.
