திருப்போரூர் அருகே தையூர் பகுதியில் நடந்த சோகமான விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். ஹரிதாஸ் (34), தனது மனைவி சுகந்தி (33), மகன்கள் லியோ டேனியல் (10), ஜோ டேனியல் (5) ஆகியோரை பைக்கில் அழைத்து, காயார் கிராமத்தில் உள்ள மாமியார் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நேற்று இரவு 11 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, எதிரே வேகமாக வந்த கார் பைக் மீது மோதியது.
மோதி வீசப்பட்டதில் ஹரிதாஸ் மற்றும் லியோ டேனியல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுகந்தி மற்றும் ஜோ டேனியலை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சுகந்தி உயிரிழந்தார்.
தற்போது ஜோ டேனியல் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து ஒரு முழு குடும்பத்தை சிதைத்துள்ளது என்பதால், அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
காரை ஓட்டியவர் காயார் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் குமார் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் காரில் மனைவி பிந்து மற்றும் மகன் அபினேஷ் பால்மோனி (6) இருந்தனர்.
இவர்கள் மூவரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக காயார் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
