சென்னை நங்கநல்லூர் பகுதியில் எம்எம்டிசி காலனியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு அதே பகுதியில் ஒரு கடை வைத்து நடத்தி வரும் சம்பத் என்பவர் வசித்து வருகிறார்.‌ இவருக்கு ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் ஐஸ்வர்யா என்ற 7 வயது மகள் இருந்துள்ளார். இந்த சிறுமியை அவருடைய தந்தை தினசரி பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று காலை பள்ளிக்கு சென்ற சிறுமியை அவருடைய தந்தை வீட்டிற்கு அழைத்து வந்தார்.

அந்த சிறுமி இரும்புகேட்டை திறந்து உள்ளே சென்ற நிலையில் அவருடைய தந்தை இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அவருடைய தந்தை சென்றவுடன் இரும்பு கேட் மூடியது. அப்போது திடீரென கேட் சரிந்து கீழே விழுந்தது. இதில் சிறுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அருகில் இருந்தவர்கள் மற்றும் சம்பத் ஆகியோர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே சிறுமி இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் இந்த சிறுமியின் மீது கேட் விழுந்து துடிதுடித்து பலியான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.