மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரான முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுத்த சில வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரையில், முதலமைச்சர் விஜய் அவர்கள் தங்களின் கூட்டணியில் இருப்பவர்களுக்குச் சொன்னபடி அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளார் என்று அவர் பாராட்டியுள்ளார்.

குறிப்பாக, வன்னி அரசு அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது தனி மனிதருக்கானது அல்ல என்றும், அது நீண்ட நெடுங்காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அங்கீகாரம் என்றும் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி முதல்முறையாக அமைச்சரவையில் இடம்பிடித்திருப்பது குரலற்றவர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது என்றும், கூட்டணி என்ற பெயரில் வாக்குகளை மட்டும் வாங்கிக்கொண்டு அங்கீகாரம் தராமல் இருந்த நிலையை வரலாற்றிலேயே முதல்முறையாக முதலமைச்சர் விஜய் மாற்றிக் காட்டியுள்ளார் என்றும் கூறி அவருக்குத் தனது நன்றியையும் பாராட்டுகளையும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.