சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், திமுகவின் தோல்வி குறித்து நடக்கும் விவாதங்களை மறைப்பதற்காகவே காங்கிரஸ் மீது பழி போடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கருணாநிதி மறைவுக்குப் பின் உண்மையான திமுக தொண்டர்கள் வீட்டில் இருக்க, வாடகைக்கு ஆட்களை அழைத்து வந்து அரசியல் செய்வதாக விமர்சித்த அவர், வரும் காலங்களில் உதயநிதி தலைமையில் திமுக மிகப்பெரிய தோல்விகளைச் சந்திக்கும் என்றும் கூறியுள்ளார்.

விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்க பாஜக மேற்கொண்ட முயற்சியின் முக்கிய புள்ளியாக உதயநிதி இருந்ததாகவும், திமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் 18 எம்எல்ஏக்களில் இருந்து 5 ஆக காங்கிரஸ் குறைந்து வஞ்சத்தில் வீழ்ந்துவிட்டதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

உதயநிதி பாஜகவுடன் ‘அண்டர் டீலிங்கில்’ இருப்பதைத் தோலுரித்துக் காட்டுவோம் என்று கூறிய மாணிக்கம் தாகூர், கூட்டணி ஆட்சியும் நேர்மையான ஆட்சியும்தான் காங்கிரஸின் இரு கண்கள் என்றார்.

முதல்வர் விஜய் மற்றும் ராகுல் காந்தி இடையிலான நல்ல நட்பு தொடரும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பத்திரப்பதிவு போன்றவற்றில் வாங்கப்பட்ட கமிஷன்களும் நன்கொடைகளும் தற்போது முழுமையாக நீக்கப்பட்டு ஊழல் குறைந்து வருவதாகப் பாராட்டியுள்ளார்.

திமுக வாங்கிய கமிஷனைத் தாங்கள் பக்கத்தில் இருந்து பார்த்திருந்தாலும், கூட்டணி தர்மத்திற்காக அப்போது அதை வெளியில் சொல்லவில்லை என்றும் அவர் ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.