இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து நீடிப்பதாக சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி என்ற ஒன்று இல்லை என்று கூறிய அவர், நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை என்றும், அலை இருந்திருந்தால் ஒரு கட்சிக்கே பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தலில் தோற்றவர்கள் ஆளும் கட்சியில் பலனை எதிர்பார்த்துச் சேருவதும், வெற்றி பெற்றவர்கள் வாக்களித்த மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஆளும் தரப்பிடம் சேருவதும் வெவ்வேறானது என்றும், அதிமுகவின் அழிவிற்குப் பாஜக தான் காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்த 24 அதிமுக எம்எல்ஏக்கள் அவர்களாகவே தான் ஆதரவு கொடுத்தனர் என்றும், தவெக அவர்களிடம் ஆதரவு கேட்கவில்லை என்றும் சண்முகம் தெளிவுபடுத்தியுள்ளார்.

மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு ஆட்சியை 3 மாதங்கள் கூடத் தாங்காது என்று கூறுவது தவறானது என்று குறிப்பிட்ட அவர், மதசார்பின்மை கொள்கையில் தவெக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற அந்த அரசுக்கு உரிய அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.