தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் பகுதியில் சித்திரை செல்வன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருக்கு ஒரு மகன் மற்றும் 3 மகள்கள் இருக்கும் நிலையில் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூரில் இருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி சித்திரை செல்வன் தன் மனைவியுடன் வெளியூருக்கு சென்றுள்ளார். இதனால் அவருடைய வீட்டை அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் பராமரித்து வந்துள்ளார். கடந்த 26 ஆம் தேதி செல்வி பராமரிப்பு பணிகளுக்காக வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி சென்னையில் உள்ள வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்தார். அப்போது பீரோவில் இருந்த ஒன்றரைப் பவுன் கம்மல், ரூ.60,000 ரொக்கப் பணம் மற்றும் ஒரு ஜோடி வெள்ளி கொலுசு ஆகியவைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திருடன் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் என்னை மன்னித்து விடுங்கள். நான் இன்னும் ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன். என்னுடைய வீட்டில் உடம்பு சரியில்லை. அதனால்தான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல்துறையினர் திருடனை வலை வீசி தேடி வருகிறார்கள்.
