
செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ் அழகிரி, இன்றைக்கு ஒரு முக்கியமான செய்தி வெளி வந்திருக்கிறது. உச்ச நீதிமன்றம் எல்லை மீறுகிற ஆளுநர்களுடைய தலையில் ஒரு குட்டு வைத்திருக்கிறது. ஆர்.என் ரவி போன்றவர்களுக்கு இந்த இழுக்குத் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. உச்ச நீதிமன்றம் தானாக எதுவும் சொல்லவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறதோ, அதை சொல்லி இருக்கிறார்கள்.
இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆளுநர் ரவி முன்பே இதை படித்து தெரிந்து கொண்டிருக்கலாம் அல்லது தெரிந்தும் அவர் தெரியாமல் இருந்திருப்பாரோ, நடித்திருப்பாரோ என்று எனக்குத் தோன்றுகிறது. உச்ச நீதிமன்றம் தெளிவாக சொல்லி இருக்கிறது… ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், மாநில அரசு அதற்கு எல்லா உரிமைகளும் உண்டு.
மாநில சட்டமன்றத்திற்கு, அமைச்சர்களுடைய செயல்பாடுகளை பரிசீலனை செய்கின்ற உரிமை உண்டு, விவாதிக்கிற உரிமை உண்டு. எனவே மாநில சட்டமன்றம் என்ன சொல்லுகிறதோ, அதுதான் முக்கியமே ஒழிய, ஆளுநர் மாநில சட்டமன்றம் அனுப்புகிற சட்ட முன் வடிவுகளை மறுக்கலாம, திருப்பி அனுப்பலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம், அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன.
ஆனால் அவர் அதை எதையுமே செய்யாமல், தன்னுடைய கையில் வைத்திருக்கிற அதிகாரம் கிடையாது. இப்படி தெளிவாக இருந்தும் கூட மூன்றாண்டு காலமாக, ஆளுநர் தமிழக சட்டமன்ற அனுப்பிய பல சட்டங்களை தன்னுடைய கையிலே வைத்திருந்தார். இது எவ்வளவு பெரிய குற்றம். இது அரச குற்றம். இந்த குற்றம் தனி மனிதனுடைய குற்றம் மட்டுமல்ல, ஒரு அரசுக்கு எதிரான குற்றம்.
ஒரு அரசுக்கு எதிரான ஒரு குற்றத்தை அவர் செய்திருக்கிறார் என்றால் அரசு தண்டனை அவருக்கு வழங்கலாம். தண்டனை பெறக்கூடிய நிலையில் அவர் இருக்கிறார். உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது.. பஞ்சாப் ஆளுநருக்கு மட்டுமல்ல மற்ற ஆளுநர்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.