டி20 உலகக்கோப்பை தொடரின் 52-வது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் தூணாக நின்றார். அவர் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இந்தியா 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கூறியதாவது, என்னை பொறுத்தவரை ஷிவம் துபே அடித்த அந்த இரண்டு பவுண்டரிகள், சஞ்சு சாம்சன் அடித்த 97 ரன்களுக்கு இணையானது. துபே அந்த ரன்களை எடுக்காமல் போயிருந்தால், சஞ்சுவின் 97 ரன்களைப் பற்றி இன்று யாரும் பேசியிருக்க மாட்டார்கள். பெரிய பங்களிப்புகள் செய்திகளில் தலைப்பாகலாம், ஆனால் இது போன்ற சிறிய பங்களிப்புகள்தான் ஒரு அணியின் வெற்றிக்கு உண்மையான அடித்தளம் என்றார்.

ஆட்டநாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனின் மிகச்சிறந்த இன்னிங்ஸை முழுமையாகப் பாராட்டாமல், அவரை மழுங்கடிக்கும் விதமாக கம்பீர் பேசியுள்ளதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர். சஞ்சு சாம்சனைப் பாராட்ட மனமில்லாமல் கம்பீர் இவ்வாறு ஒப்பிட்டுப் பேசுவதாக நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் கம்பீரின் இந்த புதிய ஒப்பீடு, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.