இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், தனது திருமண ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் டி.ஒய். பாட்டீல் டி20 தொடரில் விளையாடி வருகிறார். ஆனால், நேற்று நடைபெற்ற போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அவர் ஏமாற்றம் அளித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டி.ஒய். பாட்டீல் ‘ப்ளூ’ அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கரும், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் இணைந்து விளையாடி வருகின்றனர். மார்ச் 2-ம் தேதி நடைபெற்ற போட்டியில் கனரா வங்கி அணியை டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணி எதிர்கொண்டது.

முதலில் பேட்டிங் செய்த டி.ஒய். பாட்டீல் அணி, 17.2 ஓவர்களிலேயே 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராகக் களமிறங்கி 14 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அர்ஜுன் டெண்டுல்கர் 8 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் 5 ரன்களில் வெளியேறினார்.

முந்தைய போட்டியில் இந்திய கடற்படைக்கு எதிராக இருவரும் அரைசதம் அடித்து அசத்திய நிலையில், இந்தப் போட்டியில் இருவரும் பேட்டிங்கில் சொதப்பினர்.

பந்துவீச்சில் அர்ஜுன் டெண்டுல்கருக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவர் வீசிய தனது முதல் ஓவரிலேயே 19 ரன்களை வாரி வழங்கினார். வைபவ் சூர்யவன்ஷி தனது முழு இன்னிங்ஸிலும் எடுத்த 20 ரன்களை, அர்ஜுன் டெண்டுல்கர் தனது ஒரே ஓவரில் எதிரணிக்கு விட்டுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவருக்கு மேற்கொண்டு ஓவர்கள் வழங்கப்படவில்லை.

137 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய கனரா வங்கி அணி, வெறும் 11.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 139 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள டி.ஒய். பாட்டீல் ப்ளூ அணிக்கு இது முதல் தோல்வியாகும்.

மேலும் விரைவில் திருமணம் செய்யப்போகும் அர்ஜுன் டெண்டுல்கர், மைதானத்தில் பார்முக்குத் திரும்பப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.