ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வாழ்வா-சாவா (Super 8) ஆட்டத்தில், இந்திய அணி அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன், ஆட்ட நாயகன் விருதினையும் வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இந்திய அணி தனது அடுத்த அரையிறுதிப் போட்டியில், மார்ச் 5-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது.
வெற்றிக்கான பவுண்டரியை அடித்தவுடன் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட சஞ்சு சாம்சன், தனது தலைக்கவசத்தை (Helmet) கழற்றி மைதானத்தில் வீசினார். பின்னர் வானத்தைப் பார்த்து கடவுளுக்கு நன்றி தெரிவித்தார். வீரர்களின் இத்தகைய செயல் ஐசிசி-யின் (ICC) நடத்தை விதிகளின்படி ஒழுங்கீனமாகக் கருதப்பட வாய்ப்புள்ளது.
ஐசிசி-யின் விதிமுறைப்படி, விளையாட்டு உபகரணங்களை (மட்டை அல்லது ஹெல்மெட்) கவனக்குறைவாகவோ அல்லது ஆபத்தான முறையிலோ கையாளுவது Level 1 குற்றமாகும்
ஒரு வீரர் இத்தகைய விதியை மீறினால், போட்டி நடுவர் அவருக்குக் கண்டனம் தெரிவிக்கலாம். போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம். ஒன்று அல்லது இரண்டு ‘டிமெரிட்’ (Demerit) புள்ளிகள் வழங்கப்படலாம்.
View this post on Instagram
மேலும் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஹெல்மெட்டை வீசியது தானாகவே தண்டனைக்குரியது அல்ல என்றாலும், போட்டி நடுவர் இதனை விதியை மீறிய செயலாகக் கருதினால் சஞ்சு சாம்சன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அரையிறுதிப் போட்டிக்கு முன்னதாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
