தெலுங்கனா மாநிலம் நகரி விஜயவாடாவை சேர்ந்தவர் வெங்கட்ராமராவ்(67). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி இறந்து விட்டதால்  இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்து விட்டு, தன்னுடைய தாயார் சரஸ்வதியுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய தாய்க்கு 92 வயதானதால் அவரை கவனித்துக் கொள்வதற்காக அனுஷா என்ற பெண்ணை புரோக்கர் மூலமாக வேலைக்கு பணியமர்த்தியிருந்தார். அந்த பெண்ணும் சரஸ்வதியை நன்றாக தான் கவனித்து வந்துள்ளார். தினமும் வேலைகளை முடித்துவிட்டு அனுஷா என்ஜினியர் வீட்டிலேயே தங்குவது வழக்கம்.

ஆனால் சம்பவம் நடந்த அன்று அனுஷா அங்கு தங்கவில்லை. இந்த நிலையில் நள்ளிரவு நேரம் சரஸ்வதி அனுஷாவை அழைத்த போது அவர் வரவில்லை. எனவே தனது மகனை அழைத்துள்ளார். அவரும் வராததால் சந்தேகம் அடைந்த சரஸ்வதி வெங்கட்ராமராவ் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் பிணமாக கிடந்தார்.

அவரது உடலின் அருகே மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கட்ராமராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார் இன்ஜினியர் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதில் அனுஷா மற்றும் மர்ம நபர் ஒருவரும் வெங்கட்ராமராவின்‌ வீட்டிற்குள் நுழைந்து அவரை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது.

பின்னர் இருவரும் சேர்ந்து என்ஜினியர் வீட்டு பீரோவில் இருந்த பல கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள், ரூபாய் 90 ஆயிரம், பட்டு சேலைகள் மற்றும் தங்க நகைகள் என அனைத்தையும் திருடி விட்டு தப்பி சென்றுள்ளனர். தங்களின் கைரேகை தடயத்தை அழிக்கும் எண்ணத்தில் வெங்கட்ராமராவின் உடலின் மீது மிளகாய் பொடியை தூவி உள்ளனர்.

இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில் இருவரும்  தலைமறைவாகினர். இந்தப் பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் ஆந்திராவில் உள்ள சித்தி பேட்டையை சேர்ந்தவர் எனவும், இவருக்கு திருமணம் ஆகி அவரது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் தெரியவந்தது.

ஆனால் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உபேந்திரா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் குண்டூர் மாவட்டத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். இருவரும் தலைமறைவானதை தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் விஜயவாடாவில் இருந்து திருப்பதிக்கு செல்லும் ஒரு பஸ்ஸில் ஏறியது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.