பீகார் மாநிலத்தில் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சட்ட ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியை சேர்ந்த கூட்டணியில் உள்ள சிலர் தொடர்ந்து நடைபெறும் கொலை சம்பவங்கள் குறித்து விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் ஷேக்புரா பகுதியை சேர்ந்த சுரேந்திர கெவத்(52) சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பாஜக கட்சியை சேர்ந்த சுரேந்திர கெவத் அக்கட்சியின் கிசான் மோர்சா தலைவராக பணியாற்றி வந்தார். இவர் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக்கில் இருந்த 2 நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி உள்ளனர்.
அதில் சுரேந்திர கெவத் உடலில் 4 தோட்டாக்கள் பாய்ந்துள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு அவருக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பாட்னாவில் பிரபல தொழிலதிபர் கோபால் கெம்கா வீட்டு முன்பே சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் அடுத்து பாஜக தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பீகார் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு குறித்த கேள்விகளை எழுப்பி வருகிறது.
