மகாராஷ்டிர மாநிலம் விரார் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், 500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளைக் கைது செய்துள்ளனர். கடந்த மார்ச் 21, 2026 அன்று ஒரு வயல்வெளியில், நாவல் பழ மரத்தின் அடியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் முகம் கல்லைத் தூக்கிப் போட்டு சிதைக்கப்பட்டிருந்தது. இது போலீஸாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது.

இந்த வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு பிரிவு போலீஸார், மும்பை, தானே, நாசிக் மற்றும் பால்கர் பகுதிகளில் காணாமல் போன பெண்களின் பட்டியலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சுமார் 500 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, உயிரிழந்தவர் உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கார் பகுதியைச் சேர்ந்த பிரியா குமாரி யாதவ் (22) என்பது தெரியவந்தது. அவர் தனது கணவர் ரோஷன் யாதவுடன் நலாசோப்ராவில் வசித்து வந்தது உறுதியானது.

இது குறித்த விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பிரியாவுக்கும் ரோஷனுக்கும் 2017-ல் திருமணம் நடந்துள்ளது. முதலில் தம்பதியிடையே இணக்கம் இருந்த நிலையில், பின்னாளில் பிரியாவின் நடத்தையில் ரோஷனுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரோஷன் தனக்குக் குழந்தை வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், பிரியா மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரமும், சந்தேகமும் கொலையில் முடிந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் இருந்த மனைவியை பைக்கிலேயே நலாசோப்ராவிற்கு அழைத்து வந்துள்ளார் ரோஷன். பின்னர் கடந்த மார்ச் 19-ஆம் தேதி, தனது நண்பர் பானுபிரதாப் யாதவ் என்பவருடன் சேர்ந்து, ஆள் நடமாட்டம் இல்லாத ஷிர்வலி பகுதிக்கு பிரியாவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து பிரியாவின் கழுத்தை நெரித்துக் கொன்றதுடன், முகம் அடையாளம் தெரியாமல் இருக்கக் கல்லால் சிதைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

மேலும் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட கணவன் ரோஷன் யாதவ் மற்றும் அவரது நண்பர் பானுபிரதாப் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.