மகாராஷ்டிர மாநிலம் அக்கோலாவில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவரிடம், அவரது மகளைப் பாலியல் தொழிலுக்கு அனுப்பி வைக்குமாறு பேரம் பேசிய உதவி ஆய்வாளர் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கோலா நகரின் சிவில் லைன் காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரூ. 80 லட்சம் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் அங்குள்ள சிறை அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த ஏஎஸ்ஐ ராஜேஷ் ஜாதவ், அந்தப் பெண்ணிடம் அவரது மகளின் வயது குறித்து விசாரித்துள்ளார்.
அதற்கு அந்தப் பெண், தனது மகளுக்கு 27 வயது என்று கூறியுள்ளார். உடனே அந்த அதிகாரி, “இந்த வயது பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன், உன் மகளை ஒரு இரவுக்கு என்னிடம் அனுப்பி வை” என்று அநாகரிகமாகக் கேட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொருளாதாரக் குற்றப்பிரிவு ஆய்வாளர் (PI) அனில் ஜும்லே உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார். அப்போது அந்தப் பெண் கதறி அழுது நடந்தவற்றைக் கூறினார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆய்வாளர் அனில், சம்பந்தப்பட்ட ஏஎஸ்ஐ ராஜேஷ் ஜாதவை அடிக்கக் கையை ஓங்கினார். இருப்பினும், அவர் சீருடையில் இருந்ததால் தன்னைத் தற்காத்துக் கொண்ட ஆய்வாளர், “சீருடை அணிந்திருக்கும் உனக்கு இப்படிப் பேச எப்படி வெட்கமில்லாமல் போனது?” என்று கடுமையாகச் சாடினார்.
இந்தச் சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பெண் “ஐயா, என் மகளுக்கு 27 வயது என்று சொன்னதும், 10 ஆயிரம் தருகிறேன் அவளை என்னிடம் ஒரு இரவுக்கு அனுப்பி வை என்கிறார். நான் தான் தப்பு செய்தேன், என் மகள் என்ன செய்தாள்? அவளைப் பற்றி இப்படிப் பேச இவருக்கு எப்படி மனசு வந்தது?” என அழுதுகொண்டே கேட்கிறார். உடனடியாக ஆய்வாளர் அனில் ஜும்லே (ஏஎஸ்ஐ-யிடம் ஆவேசமாக) “சீருடை அணிந்திருக்கிறாய் என்ற பயம் இல்லையா? ஒரு பெண்ணிடம் இப்படியா பேசுவாய்?” எனச் சத்தமிடுகிறார்.
இந்த விவகாரத்தை அக்கோலா காவல்துறை நிர்வாகம் மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது. காவல் நிலையத்திற்குள்ளேயே ஒரு பெண் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, ஏஎஸ்ஐ ராஜேஷ் ஜாதவை உடனடியாகப் பணியிடை நீக்கம் (Suspension) செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
