சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘ஜென்சி திமுக மீட் அப்’ (Gen Z DMK Meet up) நிகழ்ச்சியில், சமூக வலைத்தளங்களில் திமுகவினர் சந்திக்கும் சவால்களையும், மாற்றுக் கட்சியினரின் அநாகரிகப் பதிவுகளையும் சுட்டிக்காட்டி இளைஞர் ஒருவர் பேசிய காரசாரமான உரை இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
“இன்று சமூக வலைத்தளங்களில் அரசியல் பேசினால் முத்திரை குத்துகிறார்கள், ஐடிகளை பிளாக் செய்கிறார்கள், குடும்பத்தினரை இழுத்து அநாகரிகமாகப் பேசுகிறார்கள்” என்று குமுறிய அந்த இளைஞர், கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு மாற்றுக் கட்சியினரின் ஆதரவாளர் ஒருவன் போட்ட கொடூரமான பதிவை அம்பலப்படுத்தினார்.
“ஒரு மிட்டாய்க்கு ஆசைப்பட்டு படுக்கச் சென்றால் அதற்கு முதலமைச்சர் பொறுப்பா?” என அநாகரிகத்தின் உச்சமாகப் பதிவிட்ட அந்த நபரை இன்னும் கைது செய்யாமல் இருக்கும் நிலையைச் சுட்டிக்காட்டி, “இப்படி ஒரு அரசாங்கம் எதற்கு வேண்டும்?” எனத் தன் சொந்த அரசுக்கு எதிராகவே மேடையில் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய இக்கட்டான டிஜிட்டல் சூழலிலும் திமுகவினர் பின்வாங்கக் கூடாது என உத்வேகம் அளித்த அவர், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அசாத்திய டிஜிட்டல் புரட்சியை மேடையில் நினைவுகூர்ந்தார். “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது 89-ஆவது வயதில் ட்விட்டர் (X) தளத்தை ஆரம்பித்துச் சமூக வலைதளத்தில் அரசியல் களமாடினார்;
அதனால்தான் இன்றும் அவரது எக்ஸ் தளப் பெயருக்கு பக்கத்தில் ’89’ என்ற எண் இருக்கிறது” என்ற வரலாற்று உண்மையை உடைத்தார். அத்தகைய உலக சாதனைத் தலைவரின் பேரன் பிள்ளைகளான நாம், எந்தவொரு ஐடி பிளாக்குகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து துணிச்சலாக அரசியல் பேசுவோம் என அவர் ஆற்றிய இந்த விறுவிறுப்பான உரை தற்போது சோஷியல் மீடியாவில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
