நடிகை வனிதா விஜயகுமார் நடித்தும், இயக்கியும், எழுதியும், மகள் ஜோவிகா தயாரித்தும் உருவான ‘மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் கிடைக்காத நிலையில், இப்படத்தை யூடியூப் சேனலில் வெளியிட வனிதா முடிவு செய்துள்ளார்.

இதற்காக ரூ.86 கட்டணத்தில் மெம்பர்ஷிப் முறையில் திரைப்படத்தை வெளியிடப்போவதாகவும், இந்த முடிவை நேற்று தனது இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகியாக திரும்பிய வனிதா, இந்தப் படத்தில் தனது முன்னாள் காதலர் ராபர்ட்டுடன் காதல் மற்றும் திருமண போஸ்டரை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

பாங்காக்கில் நீண்ட நாட்கள் ஷூட்டிங் நடைபெற்ற இப்படம் கடந்த வாரம் வெளியானது. ஆனால் ரிலீஸ் நாள் இளையராஜா தரப்பில் “ராத்திரி சிவராத்திரி” பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. வனிதா, “நான் நேரில் சென்று அனுமதி பெற்றேன், ஆனால் வழக்கு தொடர்ந்தது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” எனக் கண்கலங்க கூறியிருந்தார்.

மேலும், “இளையராஜாவை கடவுளாகப் பார்த்தேன்” என அவரது உணர்வுகளையும் வெளிப்படுத்தினார். திரைப்படம் வெறும் ஒரு வாரத்தில் திரையரங்குகளிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், வனிதா யூடியூப் மெம்பர்ஷிப் மாதிரியில் படத்தை வெளியிடுகிறார். ரூ.86 கட்டணத்துடன் மெம்பராக ஆனால், அவரது அனைத்து படங்களையும் பார்க்கலாம் என கூறியுள்ளார்.

தற்போது ஏராளமானோர் மெம்பர்ஷிப் வாங்கியுள்ளனர். வெளிநாடுகளில் கட்டணம் உயர்வாக இருந்தாலும், குறைக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “நான் கடன் வாங்கி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.

இது போன்ற வழிகள், நம்மைப்போன்றோர் தயாரித்த படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு புதிய முயற்சி” என ரசிகர்களிடம் ஆதரவு கேட்டுள்ளார். இதன் மூலம் யூடியூப் வழியாக திரைப்பட வெளியீட்டில் புதிய நடைமுறை உருவாகும் சாத்தியம் உள்ளது.