சமீபத்தில் வெளியான டெல்லி காவல்துறையின் தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் 15 வரையிலான 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளனர் என்ற செய்தி வெளியானது.
மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள்; 298 பேர் ஆண்கள். இதில் 191 பேர் சிறார்கள் என்பதும், அதில் 146 பேர் பெண் குழந்தைகள் என்பதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
டெல்லியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், பா.ஜ.க அரசு தூங்கிக் கொண்டிருப்பதாகவும் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடுமையாகச் சாடினார் . இந்தத் தகவல்கள் வைரலானதை அடுத்து, டெல்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் விளக்கமளித்துள்ளது:
பெண்களும் குழந்தைகளும் அதிக அளவில் காணாமல் போவதாகக் கிளப்பப்படும் வதந்திகள் திட்டமிடப்பட்ட ‘பெய்டு புரமோஷன்’ என்று காவல்துறை கூறியுள்ளது. சில நபர்கள் தங்களின் சுய லாபத்திற்காக மக்களிடையே பீதியை உண்டாக்குகிறார்கள் எனச் சாடியுள்ளது.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை உண்மையில் குறைவுதான் என்றும், மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்
2026 ஜனவரியில் மொத்தம் 1,777 வழக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக டெல்லியில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 2,000 பேர் மாயமாவதாகப் புகார்கள் பதிவாகும் சூழலில், இது ஒரு அசாதாரணமான உயர்வு கிடையாது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன சிறுவர்கள் பின்னால் எந்தவொரு பெரிய கடத்தல் கும்பலோ அல்லது கிரிமினல் நெட்வொர்க்கோ இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
