உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் ஓடிக்கொண்டிருந்த காரின் டேஷ்போர்டில் இருந்து விஷப்பாம்பு ஒன்று திடீரென வெளிப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

மேலும் ராஜ்நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் வசிக்கும் மீனாட்சி சர்மா என்ற பெண், புதன்கிழமை காலையில் தனது காரில் நொய்டாவில் உள்ள அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது சுமார் 80 கி.மீ வேகத்தில் காசியாபாத் மேம்பாலத்தில் கார் சென்றுகொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக காரின் டேஷ்போர்டு பகுதியிலிருந்து சுமார் 4 அடி நீளமுள்ள ராஜநாகம் பாம்பு ஒன்று வெளியே வந்துள்ளது.

இதனால் ஓட்டுநர் இருக்கைக்கு மிக அருகில் சில இன்ச் தூரத்தில் படம் எடுத்தபடி இருந்த பாம்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மீனாட்சி, மிகுந்த பதற்றத்திலும் சமயோசிதமாகச் செயல்பட்டு காரை மேம்பாலத்தின் நடுவிலேயே நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே குதித்து உயிர் தப்பினார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்த வழியே விஐபி பாதுகாப்புப் பணிக்காகச் சென்று கொண்டிருந்த போக்குவரத்து காவல்துறை கிரேனில் இருந்த காவலர் ஓம் பிரகாஷ் என்பவர், சாலையில் கார் அனாதையாக நிற்பதையும், பெண் ஒருவர் பயந்து நடுங்கிப் போய் இருப்பதையும் கவனித்தார்.

இந்நிலையில் காரில் விஷப்பாம்பு இருப்பதை அறிந்ததும், காவலர் ஓம் பிரகாஷ் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் தீபக் ஆகியோர் சிறிதும் பயமின்றி களத்தில் இறங்கினர். காவலர் ஓம் பிரகாஷ் ஒரு கம்பின் உதவியோடு காரின் உள்ளே மறைந்திருந்த அந்த ராஜநாகத்தை எந்தவொரு காயமும் ஏற்படுத்தாமல் மிகவும் லாவகமாக வெளியே எடுத்தார்.

பின்னர், அதை அருகில் இருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் கேனுக்குள் பத்திரமாக அடைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வேகமாகக் காரைச் செலுத்தும் போது நடந்த இந்த அசம்பாவிதத்தில் இருந்து பெண்ணைக் காப்பாற்றி, பாம்பையும் பாதுகாப்பாக மீட்ட காவலர் ஓம் பிரகாஷின் துணிச்சலை அங்கிருந்த பொதுமக்களும் சமூக வலைத்தளவாசிகளும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.