ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த லக்கன் குமார் மண்டல் என்பவருக்கும் ஃபுல்மதி தேவி என்பவருக்கும் கடந்த 2000-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர் வேலைக்காக சூரத் சென்றிருந்த நிலையில், 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வீடு திரும்பியபோது தனது மனைவி நிறைமாதக் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு, அவர் மீது கள்ளத்தொடர்பு குற்றச்சாட்டைச் சுமத்தினார்.

இதனைத் தொடர்ந்து, 2008-ஆம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடிய கணவர், 2010-இல் அந்தப் பையன் தனக்குப் பிறக்கவில்லை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்யக் கோரி கிரிதி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அப்போது அந்தப் பிள்ளைக்கு 8 வயது மட்டுமே ஆகியிருந்தது.

ஆனால், குடும்ப நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்ததால், கணவர் 2012-ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்தத் தம்பதியினரின் சட்டப் போராட்டம் நீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகள் நீடித்த நிலையில், அந்தச் சிறுவன் தற்போது 24 வயதுடைய இளைஞனாக வளர்ந்துவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற நீதிபதி அனுபா ராவத் சவுத்ரி, கணவரின் டிஎன்ஏ பரிசோதனை கோரிக்கையை நிராகரித்து தீர்ப்பளித்தார். ஒரு குழந்தை வயது வந்தவராக மாறிய பிறகு, அவர் சார்பாக டிஎன்ஏ பரிசோதனைக்கு சம்மதம் தெரிவிக்கும் சட்டப்பூர்வ உரிமையைத் தாய் இழந்துவிடுகிறார் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும், இந்த வழக்கில் தற்போது வயது வந்தவராக இருக்கும் அந்த மகன் ஒரு தரப்பாகச் சேர்க்கப்படாததால் அவரை கட்டாயப்படுத்தி டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த முடியாது என்றும், இதன் காரணமாக தாய்க்கு எதிராக எந்தவொரு பாதகமான முடிவையும் எடுக்க முடியாது என்றும் கூறி கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.