
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள டோங்கு மாவட்டத்திலுள்ள பனாஸ் ஆற்றங்கரை பகுதியில் ஜெய்ப்பூரை சேர்ந்த இளைஞர்கள் சிலர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த குழுவில் உள்ள சில இளைஞர்கள் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியுள்ளனர்.
அப்போது அவர்கள் அனைவருமே திடீரென மூழ்க தொடங்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட மற்ற நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இதனைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, இளைஞர்கள் நீந்துவதற்காக ஆற்றில் இறங்கிய போது நீரில் மூழ்கியுள்ளனர். அதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இளைஞர்களின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 3பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் ஒரே சமயத்தில் 8 இளைஞர்கள் ஆற்றில் மூழ்கி இறந்ததை அடுத்து அம்மாநில முதல் மந்திரி பஜன்லால் சர்மா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.