சேலம் அருகே அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த கோர விபத்தில், கோயிலுக்குச் சென்று திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 6 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். விபத்து குறித்து திமுக அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இத்தகைய தொடர் விபத்துகளுக்கு முதன்மைக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
“திமுக ஆட்சியில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சீரழிந்து கிடக்கிறது” என்று சாடியுள்ள அவர், பழைய பேருந்துகளை மாற்றாமல் அலட்சியம் காட்டுவதால் அப்பாவி மக்களின் உயிர்கள் பறிபோவதாகவும் எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, அரசுப் பேருந்துகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
