பீகார் மாநிலம் கயாவைச் சேர்ந்த 74 வயது மோகன் லால் என்ற முன்னாள் விமானப்படை வீரர், தன் உறவினர்கள் உண்மையாகவே தன்னை நேசிக்கிறார்களா அல்லது சொத்துக்காக மட்டுமே பழகுகிறார்களா என்பதை அறிய விரும்பினார். அவருக்கு இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர், ஓரளவு சொத்துக்களும் உண்டு. இதைச் சோதிக்க, தான் இறந்துவிட்டதுபோல நடிக்க முடிவு செய்தார். ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பிணம்போல படுத்துக்கொண்டு, கண்களை மூடி என்ன நடக்கிறது என்பதை கவனித்தார்.
அவரது ‘இறப்பு’ செய்தி ஊரெங்கும் பரவியது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வந்து கதறி அழுதனர். இறுதிச் சடங்குகளைத் தயாரித்து, அவர் கட்டித்தந்த தகன மேடைக்கே அவரது ‘உடலை’ எடுத்துச் சென்றனர். பிள்ளைகள் சடங்குகளைச் செய்து, உடலை சிதையில் வைத்தனர். கடைசியாக மகன் தீ வைக்க முன்வந்தபோது, மோகன் லால் உடலை அசைத்து, கண்களைத் திறந்து எழுந்து உட்கார்ந்தார்.
இதைக் கண்டு சிலர் பயந்து ஓடினர், மற்றவர்கள் அதிர்ச்சியில் நின்றனர். பின்னர் எழுந்து வந்த மோகன் லால், உண்மையை விளக்கினார். இச்சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இணையத்திலும் வைரலாக பரவியது. உறவுகளின் உண்மைத்தன்மையைச் சோதிக்கும் இந்த வினோத முயற்சி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
