தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்களுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் கடைகளில், ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாயும், முழு பாட்டிலுக்கு 40 ரூபாய் வரையிலும் சட்டவிரோதமாக வசூலிக்கப்படுவதாகத் தொடர் புகார்கள் வந்தன.

இதனைத் தொடர்ந்து, டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்ட பின்னரும் குறையாத இந்தப் புகார்களை அடுத்து, தவறு செய்யும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாகச் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிக்கவும் தடுக்கவும் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் மண்டல மேலாளர்களுக்குத் தீவிர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தவறு செய்யும் ஊழியர்கள் மட்டுமின்றி, இதைக் கண்காணிக்கத் தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டும், 21 வயதுக்குட்பட்டோருக்கு மது விற்கத் தடை விதித்தும் அதிரடி காட்டி வரும் முதலமைச்சரின் இந்த புதிய உத்தரவு, மதுப்பிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.