தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் சனாதன தர்மத்தை தொடர்ந்து விமர்சித்து வருவதைக் கண்டித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சனாதன ஒழிப்பு குறித்துப் பேசியதைத் தொடர்ந்து, தவெக எம்.எல்.ஏ வி.எம்.எஸ். முஸ்தபா அதற்கு ஆதரவு தெரிவித்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சனாதன தர்மம் என்பது மக்களின் வாழ்வியலோடு கலந்த ஒரு நித்திய தர்மம் என்றும், அதன் மீது வெறுப்பைக் கக்கும் அரசியல் கட்சிகள் அதன் விளைவுகளை விரைவில் அனுபவிக்கும் என்றும் அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை மக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதன் மூலம் நிரூபித்துள்ளதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். சனாதன ஒழிப்பை லட்சியமாகக் கொண்டிருப்பதாகத் தேர்தலுக்கு முன்னரே வெளிப்படையாக அறிவிக்கத் துணிவில்லாத இந்தக் கட்சிகள், மதச்சார்பின்மை என்ற முகமூடிக்கு பின்னால் ஒளிந்துகொண்டு நாடகமாடுவதாக அவர் சாடியுள்ளார்.
இந்நிலையில் சனாதன இந்து தர்மம் அரசியல் தாக்குதலுக்கான கருவி அல்ல என்றும், புனிதமான நம்பிக்கைகளை அவமதிக்கும் இவர்களுக்குத் தமிழக மக்கள் தகுந்த நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் அந்த அறிக்கையில் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
