மாதம் 70,000 ரூபாய் சம்பளம், அனைத்து வசதிகள் மற்றும் விமானத்தில் பறக்கும் வாய்ப்பு என சமூக வலைதள விளம்பரங்களை நம்பி வெளிநாடு சென்ற இந்திய இளைஞர்கள், சர்வதேச சைபர் மாஃபியா கும்பலிடம் சிக்கிப் பணயக் கைதிகளாகத் தவித்து வரும் அதிர்ச்சிச் சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
மகாராஷ்டிராவின் பீட் பகுதியைச் சேர்ந்த ஸ்வப்னில் கலுங்கே என்ற இளைஞர் கிராஃபிக் டிசைனர் வேலைக்காகப் பாங்காக் சென்றடைந்த உடனே, மர்மக் கும்பல் ஒன்றால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு, அவரது கடவுச்சீட்டு பறிக்கப்பட்டு, 3 நாட்கள் காடுகளின் வழியே ரகசியக் கூடாரத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டதை வாட்ஸ்அப் அழைப்பு மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.
அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 800 இந்திய இளைஞர்களைக் கட்டாயப்படுத்தி ஆன்லைன் மோசடி வேலைகளில் ஈடுபடுத்துவதும், அதற்கு மறுப்பவர்களுக்குக் கொடூரமான முறையில் மின் அதிர்ச்சி கொடுத்து அடித்துத் துன்புறுத்துவதுடன், பீகாரைச் சேர்ந்த ஒரு இளைஞரைக் கண்ணெதிரே படுகொலை செய்துள்ளதாகவும் கதறியுள்ளார்.
“நான் உன்னைத் தொலைபேசியில் திட்டத் தொடங்கினால் நான் பேச ஆரம்பித்துவிட்டேன் என்று நினைத்துக்கொள், உனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடு, ஏதாவது தவறாக நடந்தால் உடனடியாகக் கொன்றுவிடுவார்கள்” எனத் தனது குடும்பத்தினரிடம் அவர் பேசியுள்ள ரகசியக் குறியீட்டு உரையாடல் ஒட்டுமொத்த போலீசாரையும் அதிர வைத்துள்ளது.
தற்போது பீட் சைபர் போலீசாரின் புகாரைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இந்தியத் தூதரகத்தின் மூலமாக அங்குள்ள அரசைத் தொடர்புகொண்டு இந்த சர்வதேச மாஃபியா கும்பலின் பிடியில் இருக்கும் இந்திய இளைஞர்களை மீட்க அதிரடிப் பணிகளை தொடங்கியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
