ஜார்க்கண்ட் மாநிலத்தில், நவீன மருத்துவத்தை நம்பாமல் மூடநம்பிக்கை மற்றும் அறியாமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் வெறும் 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து கொத்துக்கொத்தாக உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஜூன் 19-ஆம் தேதி குடும்பத் தலைவர் குல்தீப் மஹதோ என்பவரும், அதற்கு அடுத்த நாளே அவரது மகளும் திடீரென நோய்வாய்ப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், உடலில் ஏதோ அசுரன் புகுந்துவிட்டது என்று பயந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள், மருத்துவமனைக்குச் செல்வதை விடுத்து ஒரு மாந்திரீகம் செய்யும் பேய் ஓட்டுபவரை நாடியுள்ளனர்.
அங்கு அந்த விசித்திர மந்திரவாதி சொன்ன பேச்சைக் கேட்டு, உடலில் இருக்கும் அசுரனை விரட்டுவதற்காக அவரிடம் இருந்து பெற்ற சாம்பலையும் சில எலும்புகளையும் அந்தக் குடும்பத்தினர் அப்படியே பச்சையாக உட்கொண்டுள்ளனர்.
இதன் கடுமையான நச்சுத்தன்மை காரணமாக ஒட்டுமொத்தக் குடும்பத்தினருக்கும் அடுத்தடுத்து கொடூரமான வயிற்றுக்கோளாறு ஏற்பட்டு, உடல்கள் வீங்கத் தொடங்கிய நிலையில், குல்தீப்பின் இரண்டாவது மகள் இந்து குமாரி ஜூன் 26 அன்றும்,மருமகள் ஸ்வேதா குமாரி ஜூன் 28 அன்றும், அவரது மகன் நகுல் மஹதோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜூன் 29 அன்று பரிதாபமாகத் துடிதுடித்து மடிந்துள்ளனர்.
தற்போது குல்தீப்பின் மனைவி லக்கோ தேவி,ஒரு மகன், ஒரு பேரன் உட்பட மேலும் 5 குடும்ப உறுப்பினர்கள் அதே மருத்துவமனையில் மிக ஆபத்தான நிலையில் மரணப் போராட்டத்தை எதிர்கொண்டு வரும் சூழலில், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஜார்க்கண்ட் சுகாதாரத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அதிரடியாக விரைந்து, அவர்கள் உட்கொண்ட உணவு மற்றும் அந்த விசித்திரச் சாம்பலின் மாதிரிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விசித்திர செயலால் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
