மகா சிவராத்திரியை முன்னிட்டு நாடு முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மக்கள் விரதமிருந்து, இரவு முழுவதும் கண்விழித்து பூஜைகளை மேற்கொள்வார்கள். அந்த அடிப்படையில் கோவை போலுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட பூண்டி அடிவாரத்தில் புகழ்பெற்ற வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் இருக்கிறது.

அக்கோவிலில் இருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் ஏழு மலைகளையும் தாண்டி சுயம்பு லிங்கமாக இருப்பவர் வெள்ளிங்கிரி ஆண்டவர். அது ஏழு மலைகள் அடர்ந்த வனப் பகுதியை சேர்ந்ததாகும். இங்கு வன விலங்கு அதிகமாக இருகப்பதனால் பக்தர்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. இதனிடையே சுவாமி தரிசனம் செய்ய பிப்ரவரி மாதம் முதலில் இருந்து மே மாதம் இறுதிவரை கோடை காலங்களில் வனத்துறை பக்தர்களுக்கு அனுமதியளிக்கும்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரும்பாலான பக்தர்கள் மலையேறி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பக்தர்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் பல முன்னேற்பாடுகளை செய்துள்ளது.