திருவள்ளூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் வரி உயர்வு மற்றும் மின்கட்டண உயர்வைக் கடுமையாகச் சாடினார். அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் எவ்விதச் சுமையுமின்றி நிம்மதியாக வாழ்ந்ததாகவும், ஆனால் தற்போதைய ‘விடியா ஆட்சியில்’ மின்சாரக் கட்டணம் அதிரடியாக 67 சதவீதம் உயர்த்தப்பட்டு மக்களை வாட்டி வதைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுமட்டுமல்லாமல், சொத்து வரி மற்றும் கடை வாடகை வரி என வரிக்கு மேல் வரி போட்டு இந்த அரசு பொதுமக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து வருவதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுதோறும் 6 சதவீத வரி உயர்வு முறையைக் கொண்டு வந்திருப்பதுடன், தற்போது குப்பைக்கும் வரி வசூலிப்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். “அப்பாவுக்கும் மகனுக்கும் கோபம் வரும் என்பதால் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது” என்று ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினைச் சாடிய அவர், இப்படி வரி போட்டு மக்களைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம் நமக்குத் தேவையா என மக்களிடம் கேள்வி எழுப்பினார். திமுக அரசின் இத்தகைய செயல்பாடுகள் மக்களைக் கடும் துயரத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
