UPSC தேர்வு முடிவுகள் குறித்துத் தவறான விளம்பரங்களை வெளியிட்ட டெல்லியைச் சேர்ந்த ‘வஜிராவ் & ரெட்டி’ பயிற்சி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) ₹15 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
2023-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த 645 மாணவர்கள் வெற்றி பெற்றதாக அந்த நிறுவனம் விளம்பரம் செய்திருந்தது. ஆனால், இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், வெற்றி பெற்றதாகக் கூறப்பட்டவர்களில் 431 பேர் அந்த நிறுவனத்தின் எந்தவொரு பாடத்திட்டத்திலும் சேரவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
இந்தத் தவறான வழிகாட்டுதலை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து, மாணவர்களை ஏமாற்றும் வகையில் செயல்பட்டதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
