உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், போட்டித் தேர்வுகளுக்குப் படிக்குமாறு தந்தை வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த 19 வயது மகன், தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டிட்ரம்மில் ஒளித்து வைத்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
லக்னோவில் ‘வர்தமான் பேத்தாலஜி’ என்ற பெயரில் ஆய்வகம் நடத்தி வந்தவர் மன்வேந்திர பிரதாப் சிங். இவர் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, மன்வேந்திர பிரதாப் சிங்கின் மகனும், பி.காம் மாணவருமான அக்ஷத் பிரதாப் சிங்கிடம் போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அவர், நீண்ட நேர விசாரணைக்குப் பிறகு தனது தந்தையைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் (DCP) விக்ராந்த் வீர் கூறுகையில்: பிப்ரவரி 20-ஆம் தேதி அதிகாலை 4:30 மணியளவில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னைத் தொடர்ந்து போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுமாறு தந்தை வற்புறுத்தி வந்ததால் அக்ஷத் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். அந்த ஆத்திரத்தில், வீட்டில் இருந்த துப்பாக்கியால் தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளார்.”
கொலைக்குப் பிறகு தப்பிக்க நினைத்த அக்ஷத், வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்த தந்தையின் உடலைத் தரைத்தளத்திற்குக் கொண்டு வந்துள்ளார். அங்கு உடலைத் துண்டு துண்டாக வெட்டி, ஒரு நீல நிற பிளாஸ்டிக் Drum-ல் மறைத்து வைத்துள்ளார். சில உடல் பாகங்களைச் சௌதரோனா கிராமத்திற்கு அருகே வீசியுள்ளார்.
தகவலறிந்த போலீஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். வீட்டின் தரைத்தளத்திலிருந்து சில உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொலையாளி அக்ஷத் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
