நவீன டிஜிட்டல் யுகத்தில் வளர்ந்து வரும் இன்றைய பள்ளி மாணவர்களுக்கு, பாரம்பரிய அனலாக் கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்கத் தெரியவில்லை என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை சமூக வலைதள வீடியோ ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜான் சியோ என்ற நபர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் அனலாக் கடிகாரத்தைக் காட்டி நேரத்தைக் கேட்டபோது, பெரும்பாலான மாணவர்கள் தவறான பதில்களையே அளித்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by John Seo (@jvhnseo)

ஒரு மாணவர் 12 மணி 9 நிமிடம் எனக் காட்டிய நேரத்தை 9 மணி 12 நிமிடம் என்றும், மற்றொரு மாணவி ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்ற அடிப்படை அறிவின்றி 6 மணி 74 நிமிடம் என்றும் பதிலளித்தது காண்போரைத் திகைக்க வைத்துள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தொடக்கப் பள்ளியிலேயே கற்பிக்கப்பட வேண்டிய இத்தகைய அடிப்படைத் திறன்களைக் கூட மாணவர்கள் கற்காமல் இருப்பது கவலைக்குரியது எனப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

செல்போன் மற்றும் கணினித் திரைகளிலேயே அதிக நேரத்தைச் செலவிடுவதால் மாணவர்களின் சிந்திக்கும் திறன் குறைந்து வருவதாகவும், இது எதிர்கால சந்ததியினரின் அறிவு வளர்ச்சிக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.