இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பதே ஒரு தனி அனுபவம் தான், அதுவும் 6 அடி 5 அங்குல உயரம் கொண்ட ஒரு வெளிநாட்டுக்காரருக்கு எப்படி இருக்கும்? மும்பையில் பிறந்து தற்போது லிதுவேனியாவில் வசிக்கும் சாந்தி முதலியார், தனது காதலனுடன் இந்திய ரயிலில் பயணம் செய்த சுவாரஸ்யமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2nd AC பெட்டியின் மேல் படுக்கையில் (Upper Berth) அந்த உயரமான நபர் படுக்க முடியாமல் திணறுவதைப் பார்த்த சாந்தி, “அவர் உணர்வுப்பூர்வமாக இங்கே பொருந்திவிட்டார், ஆனால் உடல் ரீதியாக? அது சந்தேகம்தான்!” என ஜாலியாகப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், “இவ்வளவு உயரமா!” என வியப்பதோடு, அடுத்து அவரை ‘வந்தே பாரத்’ ரயிலில் கூட்டிச் செல்லுங்கள் என ஐடியா கொடுத்து வருகின்றனர்.
இந்த வீடியோவிற்கு ஒரு பயனர் “ஏன் அவருக்கு இந்தியாவை வெறுக்க வைக்கிறீர்கள்?” என விமர்சிக்க, அதற்குப் பதிலளித்த சாந்தி, “உண்மை அதுவல்ல, அவர் ஸ்லீப்பர் கிளாஸ் பயணத்தைத்தான் மிகவும் ரசித்தார்” எனக் கூறி நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். 2016-ல் தமிழகத்தில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு லிதுவேனியா சென்ற சாந்தி, அங்கேயே தனது காதலைக் கண்டுபிடித்துள்ளார். தனது காதலனுக்கு இந்திய ரயில்வேயின் எதார்த்தத்தை அறிமுகப்படுத்த அவர் எடுத்த இந்த முயற்சி, பலருக்கும் தங்களது ரயில் பயண நினைவுகளைத் தூண்டியுள்ளது.
