மும்பை அருகே உள்ள விரார் பகுதியில், சாலையோரம் பழங்கள் விற்பனை செய்த சாஜன் என்ற நபர், சாக்கடை நீரைப் பழங்களின் மீது தெளித்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரைப் பிடித்துத் தட்டிக்கேட்டபோது, அந்தத் தண்ணீர் சுத்தமானதுதான் என்று வாதிட்டதுடன், அதைத் தானும் குடித்துக் காட்டி மக்களை நம்ப வைக்க முயன்றுள்ளார். ஆனால், அவரது இந்த அருவருப்பான செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவரை விடாமல் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதோடு, உணவுப் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

​இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தெருவோரக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்கும்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் சுகாதாரத்தைப் பற்றி கிஞ்சற்றும் கவலையின்றி இப்படிப்பட்ட செயல்கள் அரங்கேறுவது கண்டனத்திற்குரியது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். உணவுப் பொருட்களில் இதுபோன்ற தரம் குறைந்த வேலைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.