தமிழக வெற்றிக் கழகத்தின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் குட்டி மீது, அதே கட்சியின் மகளிரணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பாலியல் சீண்டல் புகார் அளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் பூந்தமல்லி தனித் தொகுதி வேட்பாளராக பிரகாசம் குட்டி என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் மீது கட்சியின் மகளிரணி நிர்வாகி ஒருவர் இன்று திருவள்ளூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் நேரில் ஆஜராகி புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், பிரகாசம் குட்டி தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும், பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாகவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார். புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தப் பெண் நிர்வாகி கூறியதாவது, “வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாசம் குட்டி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே என்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இது குறித்து ஆதாரங்களுடன் கட்சியின் தலைமைக்கு அப்போதே புகார் அளித்தேன். ஆனால், தலைமை எந்தவித விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்கவில்லை.

இப்போது எவ்வித தயக்கமும் இன்றி அவருக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் அளிக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம் என்று கூறும் கட்சியில், புகார் அளித்தும் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கே முக்கியத்துவம் அளிப்பது வேதனையளிக்கிறது.

மேலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக வேட்பாளர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளதும், அதுவும் கட்சியின் பெண் நிர்வாகியே புகார் அளித்திருப்பதும் பூந்தமல்லி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் விசாரணை நடத்தப்படுமா அல்லது தவெக தலைமை வேட்பாளரை மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது