பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள சேலம் தப்ரி பகுதியில், 35 வயதான தவிந்தர் குமார் என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் வேலை பார்த்து வந்த தவிந்தர் குமார், கடந்த செவ்வாய்க்கிழமை லூதியானா திரும்பிய 15 நிமிடங்களிலேயே வீட்டிலிருந்து வெளியேறியவர் மீண்டும் வரவில்லை. வியாழக்கிழமை அன்று பிளாஸ்டிக் பேரல் ஒன்றில் அவரது தலை கண்டெடுக்கப்பட்டது, மற்ற உடல் பாகங்கள் அருகில் உள்ள வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடந்தன.

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் விசாரணையைத் தொடங்கினர். இந்தக் கொடூரக் கொலை தொடர்பாகத் தவிந்தர் குமாரின் நண்பரான ஷம்ஷேர் சிங் மற்றும் அவரது மனைவி குல்தீப் கவுர் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஷம்ஷேர் சிங் ரம்பத்தைப் பயன்படுத்தி தவிந்தரை கொலை செய்து, உடலை ஆறு துண்டுகளாக வெட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்பதியினர் இருவரும் சேர்ந்து உடல் பாகங்களை மூட்டையில் கட்டி வெவ்வேறு இடங்களில் வீசிச் சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

உயிரிழந்த தவிந்தர் குமாருக்கு மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். இந்தக் கொலைக்கான பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.