தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப் பரிசு வழங்க முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கான கூடுதல் நிதியைப் பெற மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு உதவி கோரியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சுமார் 3.47 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5,000 பொங்கல் பரிசு வழங்க திட்டமிடப்பட்டது. இதற்கு சுமார் ரூ.170 கோடி நிதி தேவைப்படுகிறது. ஏற்கனவே புதுச்சேரி அரசின் ரூ.14,100 கோடிக்கான திருத்திய பட்ஜெட் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில், தற்போது நிலவும் நிதி நெருக்கடியால் பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் ரங்கசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மாநிலத்தின் நிதிநிலை, கூட்டணி விவகாரங்கள் குறித்து விவாதித்த முதல்வர், பொங்கல் பரிசு உள்ளிட்ட நலத்திட்டங்களைச் செயல்படுத்த கூடுதல் நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு வலியுறுத்தினார்.

முதல்வரின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அமைச்சர், நிதித் தேவை குறித்த விரிவான ஆவணங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தினார். மத்திய அமைச்சரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசுத் துறைகள் நேற்றிரவே தேவையான புள்ளிவிவரங்களைத் திரட்டின. இந்த முக்கிய ஆவணங்களுடன் அமைச்சர் லட்சுமி நாராயணன் இன்று (ஜனவரி 10) டெல்லி செல்கிறார் என்று கூறப்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் நிதி பிரச்சனை காரணமாக 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டிருந்த நிலையில் பின்னர் 4000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்க முடிவு செய்தார். அதன்படி 3.50 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க 140 கோடி நிதி ஒதுக்கீடு வழங்க கோரி கோப்புகள் அனுப்பிய நிலையில் போதிய நிதி இல்லை என கூறி நிதித்துறை அந்த கோப்புகளை திருப்பி அனுப்பி உள்ளது. மேலும் முதல்வர் வழங்கிய கோப்புகளை நிதித்துறை திருப்பி அனுப்பியதால் தற்போது பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது