தமிழகத்தில் தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி ஒரு பொருந்தாத கூட்டணி என்று பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
நாட்டில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வருவார். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை தி.மு.க-வையும், கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரையும் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தார். ஆனால், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு முதல்வராக்கப்பட்ட ஒருவர், மீண்டும் மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் எனக் கூறுவது அநீதியின் உச்சக்கட்டமாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தில் போட்டியிடப் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். 50 ஆயிரம் பேர் விருப்ப மனு வாங்கிச் சென்ற நிலையில், 500 பேர் கூட வராதது அந்தக் கட்சியினரிடையே மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்வி பயத்தின் காரணமாகவே அருண்ராஜ் போன்றவர்கள் பா.ஜனதா மீது பழி சுமத்திப் பேசி வருகின்றனர். உண்மையில் அவர்களுக்குத்தான் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
மறைந்த தலைவர் விஜயகாந்த் தனது வாழ்நாள் முழுவதும் தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்தவர். தற்போது தே.மு.தி.க., தி.மு.க-வுடன் கைகோர்த்திருப்பது அந்த இரு கட்சிகளுக்கும் பின்னடைவையே தரும். இது ஒரு கொள்கையற்ற, பொருந்தாத கூட்டணி. யார் வந்தாலும் வரவேற்க வேண்டிய கட்டாயச் சூழலில் தி.மு.க. இருக்கிறது.
தி.மு.க. – தே.மு.தி.க. கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தேர்தல் முடிவுகள் இதனைத் தெளிவுபடுத்தும். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
