முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தால் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று திமுகவின் முக்கிய நிர்வாகி தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் அதிமுகவில் இருந்தபோது எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டவர்கள் என்பதும், தேனி மாவட்டத்தில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஓபிஎஸ்-ஐ வரவேற்கும் விதமாகத் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓபிஎஸ் திமுகவில் இணைந்தால் மீண்டும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் அவருக்கும் இடையே மோதல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பு அந்தப் பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது தனிப்பட்ட முடிவாக இல்லாமல், திமுக தலைமையின் அறிவுறுத்தலின் பெயரிலேயே தங்க தமிழ்ச்செல்வன் இவ்வாறு பேசியிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதன் மூலம் தேனி மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியலையும் திமுக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
