தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) என்பது ஒரு பரிதாபத்திற்குரிய கட்சியாக இந்தத் தேர்தலோடு முடிந்துவிடும் என்றும், களத்தில் அ.தி.மு.க-விற்குப் போட்டியாக தி.மு.க மட்டுமே உள்ளது என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது பற்றி செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைமை தற்போது மிகவும் பரிதாபமாக உள்ளது. அந்தக் கட்சியை யாரும் கண்டுகொள்வதே கிடையாது. த.வெ.க-வினர் தங்களை ஏதோ பெரிய கட்சியை எதிர்த்துப் போராடுவது போலக் காட்டிக் கொள்கிறார்கள். அப்படிச் செய்தால் மக்கள் அவர்களை மதித்துவிடுவார்களா?
அங்கு யார் இருக்கிறார்கள்? த.வெ.க. என்பது ஒரு நாள் கூத்து போன்றது. ஒரே நாளில் இடத்தை காலி செய்துவிட்டு ஓடிவிடுவார்கள். பா.ஜனதா தங்களுக்கு அழுத்தம் கொடுப்பதாக அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் கூறுவது லூசுத்தனமானது. மத்திய அரசு அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு அது ஒன்றும் பெரிய கட்சி கிடையாது. அவர்கள் சும்மா நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, தற்போது எடப்பாடி பழனிசாமி கையில் அற்புதமாக இருக்கும் பேரியக்கம். எடப்பாடியாரின் கரங்களில் இருப்பவர்கள் அனைவரும் வீர வாள்கள், போர் வாள்கள். அ.தி.மு.க-வை எதிர்க்கும் துணிச்சல் தி.மு.க-விற்கு மட்டுமே உண்டு; வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது. வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியும், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் தான் நேருக்கு நேர் மோதும்.
அ.தி.மு.க. மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறிய கருத்துக்குப் பதிலளித்த அவர், “தனித்து நின்று 25 ஆயிரம் வாக்குகள் வாங்கியவர்களுக்கெல்லாம் அ.தி.மு.க. பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அ.தி.மு.க. தனித்து நின்றாலும் என்றும் சிங்கம் தான். காங்கிரஸ் கட்சி சும்மா வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் ஒரு வேடிக்கைப் பொருளாகவே உள்ளது” என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வெட்கக்கேடானது. இது தொடர்பாக உயர் நீதிமன்றமே குட்டு வைத்தும் வழக்குப் பதிய மறுப்பது ஏன்? சம்பந்தமில்லாத விஷயங்களுக்கெல்லாம் தேடித் தேடி வழக்குப் போடுபவர்கள், நீதிமன்றம் சொல்லியும் அமைதியாக இருக்கிறார்கள். தி.மு.க. அமைச்சர்கள் என்ன செய்தாலும் அதைத் தட்டிக்கேட்காமல் தட்டிக்கொடுக்கும் கட்சியாகவே தி.மு.க. தலைமை உள்ளது என்று அவர் கடுமையாகச்சாடினார்.
