தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் விலகி, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் K.சரவணன், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் இந்தச் சங்கத்திற்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் மற்றும் அதன் கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியைச் (கொ.ம.தே.க) சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.

தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திடீரென அ.தி.மு.க-வில் இணைந்திருப்பது, தி.மு.க கூட்டணியினரிடையே சற்றே அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வின் கை ஓங்குவதற்கு இந்த இணைப்பு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.